அசாமில் பலத்த மழை: உயிரியல் பூங்கா மூழ்கியது- 500 விலங்குகள் பலி
இந்தியா : அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. அங்குள்ள 27 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுவரை அங்கு மழைக்கு 115 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அங்குள்ள பிரம்மபுத்திரா நதி உள்பட அனைத்து நதிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமில் உள்ள காஜி ரங்கா உயிரியல் பூங்காவில் அரிய வகை காண்டா மிருகங்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் இருந்தன.
பிரம்மபுத்திரா நதியில் இருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ள நீர் காகிரங்கா உயிரியல் பூங்காவில் புகுந்தது. இதனால் சில மணி நேரத்திற்குள் உயிரியல் பூங்காவின் 80 சதவீத பகுதி வெள்ள நீரில் மூழ்கியது. இதனால் பள்ளமான பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 காண்டா மிருகங்கள், 465 மான்கள், 28 பன்றிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட விலங்குகள் நீரில் மூழ்கி பலியாயின.
மேடான பகுதிகளில் இருந்த விலங்குகள் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி அருகில் உள்ள காட்டுக்குள் தப்பி சென்றன. அவற்றை பிடிக்கும் பணியில் உயிரியல் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபற்றி காஜிரங்கா உயிரியல் பூங்கா நிர்வாகி அபிஜித் பவால் கூறும் போது, உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இங்கிருந்து தப்பிச் சென்ற விலங்குகளை பிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். மழை தொடர்ந்து பெய்வதால் காட்டுக்குள் செல்ல கடினமாக உள்ளது. ஆனாலும் ஊழியர்களின் தீவிர முயற்சியால் 2 காண்டாமிருகம் உள்பட 75 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளது. அவைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து நிறைய உணவுகளும் வழங்கப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!