வங்கக் கடல் புதிய புயலுக்கு பெயர் பாய்லின்!
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயலுக்கு பாய்லின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. "பாய்லின்' என்ற தாய்லாந்து மொழி சொல்லுக்கு நீல நிற கல் என்று பொருள். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள இந்தப் புயல், ஆந்திரம் - ஒடிசா மாநிலங்களுக்கு இடையே வரும் 12-ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை உருவானது. பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புதன்கிழமை காலை வலுப்பெற்று, மாலையில் புயலாக மாறியுள்ளது.
புதன்கிழமை இரவு வரையிலான நிலவரப்படி இது விசாகப்பட்டணத்தில் இருந்து 1100 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டிருந்தது. இப்போது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
இது ஒடிஷாவின் கலிங்கப்பட்டணம் - பாரதீப் இடையே சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கும். பாய்லின் புயல் உருவானதைத் தொடர்ந்து ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் சுமார் 175-185 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புயலால் ஆந்திரம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும்.
தமிழகத்தில் கனமழை
இந்த நிலையில் வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வட தமிழகத்தில் பஞ்சப்பட்டி -120, கிருஷ்ணகிரி - 90, பையூர் - 80, தோகைமலை, அறந்தாங்கி, பென்னாகரம், ஒகேனக்கல், செங்கம், கீரனூர் - 70, ஊத்தங்கரை, சாத்தனூர் அணை, ராயக்கோட்டை - 60 போன்ற பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
ஒசூர், அரூர், செஞ்சி, சேலம், ஏற்காடு, திருவண்ணாமலை, ஆம்பூர், தருமபுரி வாழப்பாடி போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!