தெலுங்கானா பிரச்சினையால் தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நீரும் குறைந்தது
ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தால் தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நீரின் அளவு பெருமளவு குறைந்துள்ளது.
ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் தமிழகத்துக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஆண்டுக்கான தண்ணீர் கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி திறந்து விடப்பட்டது. 6ம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டுக்கு தண்ணீர் வந்தது.
கடந்த மாதம் 18ம் தேதி வரை தமிழகத்துக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கண்டலேறுவில் இருந்து 600 கன அடியாக திறக்கப்படும் தண்ணீர், சேதாரம் போக ஜீரோ பாயின்ட்டுக்கு 200 கனஅடி வரை வரவேண்டும். ஆனால் தற்போது 75 முதல் 80 கனஅடி வரை மட்டுமே வந்துகொண்டு இருக்கிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தெலங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவினர் தமிழகத்துக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று கூறி காளஹஸ்தி அருகே உள்ள தொட்டாம்பேடு, வரதய்யபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மதகுகளில் வரும் தண்ணீரை, ஆந்திர விவசாயத்துக்கு திருப்பி விடுகின்றனர். இதனால் தமிழகத்துக்கு வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது.
கால்வாயில் 4 முதல் 5 அடி உயரம் வரை வரவேண்டிய தண்ணீர் 2 அடி மட்டுமே வந்துகொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு குறைந்த அளவு தண்ணீர்தான் கிடைக்க வாய்ப்புள்ளது. போராட்டக்காரர்களுக்கு தெரியாமல் மதகை திறந்துவிட்டால், அவர்கள் மீண்டும் விவசாயத்துக்கு தண்ணீரை திருப்பி விடுகின்றனர் என்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!