சவுதி வார இறுதி நாட்கள் மாறுகின்றன: இனி வெள்ளி-சனி வார இறுதி நாட்கள்!
சவுதி அரேபியா தமது வார இறுதி நாட்களை வெள்ளி-சனி என்று மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து சவுதியில் வேலைநாட்கள், ஞாயிறு-வியாழன் என்று மாறப்போகின்றது.
இதுவரை காலமும் சவுதியில் வார இறுதி நாட்கள், வியாழன்-வெள்ளி என்றே இருந்தன. அநேக அரபு நாடுகளிலும் அவ்வாறுதான் உள்ளன. கடந்த மாதம் ஓமன் அரசு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளை வார இறுதி நாட்களாக அறிவித்தது. தற்போது, சவுதியும் அப்படியே மாற்றிக் கொள்ளப் போகின்றது.
சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ்அல் சவுத், இந்த அறிவிப்பை செய்துள்ளார். “உலக வேலை வாரத்தில் இருந்து, சவுதியின் வேலை வாரம் இதுவரை பெரிதும் மாறுபட்டு இருந்ததால், பல பொருளாதார வாய்ப்புகள் இழக்கப்பட்டன. அதையடுத்து, உலக வேலை வாரத்துக்கு மிக நெருக்கமாக சவுதி வேலை வாரத்தையும் கொண்டுவர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனவும், மன்னர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து, சவுதி ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், சவுதி மத்திய வங்கி, மற்றும் பிற நிதி நிறுவனங்கள் இம்மாதம் 29-ம் தேதி இந்த மாற்றத்தை கொண்டுவருகின்றன. அரசு அமைச்சுக்களும் அதே தினத்தில் தமது காலண்டர்களை மாற்றுகின்றன. பள்ளிகளில் மட்டும் அடுத்த கல்வியாண்டில் இந்த மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!