பூமியிலிருந்து 20 கி.மீ.க்கு மேல் நிறுத்தி பிரமாண்ட பலூன்கள் மூலம் குக்கிராமங்களிலும் இன்டர்நெட்
பூமியில் இருந்து வாயு மண்டலத்தின் மேலே சுமார் 20 கி.மீ. தொலைவில் பலூன்களை நிலை நிறுத்தி, நவீன ஆன்டனாக்கள் மூலம் குக்கிராமங்களிலும் மக்கள் அனைவருக்கும் இன்டர்நெட் வசதி அளிக்கும் திட்டத்தை கூகுள் நிறுவனம் தயாரித்துள்ளது. நியூசிலாந்தில் சோதனை ரீதியில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தொலைதொடர்புத் துறையின் அதிநவீன முன்னேற்றம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்டு கூகுள் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவு தலைவர் கரீம் தெம்சாமணி கூறியதாவது:
உலக மக்கள் அனைவருக்கும் இன்டர்நெட் வசதி அளிக்கும் நவீன திட்டத்தை கூகுள் தயாரித்துள்ளது. இதன்படி, வாயு மண்டலத்தின் மீது 20 கி.மீ. தொலைவில் ஹீலியம் பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் பூமியில் இருந்து வரும் சிக்னல்கள் பெற்று, தேவைப்படுபவர்களுக்கு அளிக்கப்படும். அதாவது முன்பு டிவி நிகழ்ச்சிகளை ஆன்டனாக்கள் மூலம் பெற்று பார்த்ததை போன்று இதை எங்கு வேண்டுமானாலும் ஆன்டனாக்களை பொருத்தி பார்க்கலாம். அடர்ந்த வனப்பகுதிகளில் இருப்பவர்களும் ஆன்டனாக்கள் மூலம் இன்டர்நெட் வசதி பெற முடியும்.
மேலும், இத்திட்டத்தினால் மற்றொரு லாபமும் உள்ளது. அதாவது இயற்கை பேரிடர் நேரங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்காமல், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும். மருத்துவ வசதியே இல்லாத குக்கிராமங்களில் செவிலியர்கள் இணையதள வசதியுடன், நகரத்தில் உள்ள மருத்துவர்கள் ஆலோசனையின்படி மருத்துவம் மேற்கொள்ள முடியும்.
மேலும், ஆசிய பகுதிகளில் உள்ள சிறு, குறு வர்த்தகர்கள், விவசாயிகளும் இன்டர்நெட் மூலம் சிறப்பான பலன்களை பெற முடியும். விவசாயிகள் சந்தை நிலவரத்தை அறிந்து தங்களுடைய உற்பத்தியை நல்ல லாபத்துக்கு விற்க முடியும். வானிலையை அறிந்து பயிர் செய்ய முடியும். இப்படி பல லாபங்கள் உள்ளன. இந்த பலூன்கள் விமானங்களின் பாதையை காட்டிலும் இரண்டு மடங்கு உயரத்தில் நிறுத்தப்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பலூன்களில் பொருத்தப்படும் கருவிகளுக்கு தேவையான மின்சாரத்தை, சூரிய ஒளி மின்தகடுகள் மூலம் தானே தயாரித்துக் கொள்ளும்.
ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போது நியூசிலாந்தில் கிறிஸ்டோசர்ச் நகரில் 30 பலூன்களை பறக்கவிட்டு சோதனை நடத்தப்படுகிறது. பூமியில் 20 பேருக்கு ஆன்டனாக்கள் மூலம் இன்டர்நெட் வசதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால் உலகத்தில் இன்டர்நெட் வசதி கிடைக்காத இடமே இல்லை என்னும் நிலையை 2015ம் ஆண்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.
இவ்வாறு கரீம் தெம்சாமணி கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!