Wednesday, June 19, 2013

மேட்டூர் அணையில் புதையல் ரகசியம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

மேட்டூர் அணையில் புதையல் ரகசியம் அடங்கிய கல்வெட்டு கண்டுபிடிப்பு




மேட்டூர் அணையின் நீர்மட்டம் 16 அடியாக குறைந்ததால், நீர்த்தேக்க பகுதியான கீரைக்காரனூரில் ஆற்றின் நடுவில் உள்ள வீரபத்திரன் சுவாமி கோயில் முழுமையாக வெளியில் தெரிகிறது. இந்த கோயிலில் புதையல் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் விக்டோரியா ராணி காலத்து வெள்ளிக் காசுகள் இந்த பகுதியில் கிடைத்தன. இதைத்தொடர்ந்து, நேற்று அப்பகுதியில் பழங்கால ரகசிய குறிப்புகள் கொண்ட சமஸ்தான கல்வெட்டை கிராம மக்கள் கண்டுபிடித்தனர். இதை, கல்லில் அடங்கியுள்ள குறியீடுகள் புதையல் ரகசியம் என்று இந்த பகுதியினர் கூறுகின்றனர். கல்லின் இரண்டு பக்கங்களிலும் பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் எழுத்துக்கள் இல்லாமல் வரைபடங்கள் உள்ளன. இதனால், இந்த கல்லை சமஸ்தான கல் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். அதாவது பழங்கால மன்னர்கள் தங்களுடைய போர் நுணுக்கங்களை எதிரிகள் அறியாத வகையில் குறிப்புகளாக வரைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சமஸ்தான கல் அருகே முறுக்கு மீசையுடன் ஈட்டியை கையில் பிடித்தவாறு எல்லைச்சாமியின் சிலை உள்ளது. சமஸ்தான கல்லில் உள்ள குறிப்பை பார்த்து எவரேனும் புதையலை எடுத்துக் கொண்டு எல்லையை தாண்டினால் எல்லைச்சாமி தண்டித்து அவர்களை வதம் செய்வதாக இப்பகுதியினர் கூறுகின்றனர். அதையும் மீறி புதையலை தேடும் மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள், கல்வெட்டில் உள்ள ரகசிய குறியீடுகளை தெரிந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் புதையல் எடுக்க முயன்றால், தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுவதால் இங்கு புதையல் தேடுவோர் அச்சத்துடன் உள்ளனர்.மேலும் எல்லைச்சாமியை சாந்தப்படுத்தும் வகையில், பரிகார பூஜை செய்யவும், பூசாரிகளிடம் பலர் குறி கேட்டு வருகின்றனர். இந்த சமஸ்தான கல் மற்றும் எல்லைச்சாமி சிலை பகுதிகளை, கிராம மக்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!