பக்தர்கள் காணிக்கை செலுத்திய 260 டன் தலைமுடி தேக்கம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 5வது ரக தலைமுடி ஏலம் போகாததால் 260 டன் தேங்கியுள்ளது. இதனால் விலையை குறைத்து ஏலம் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலின்படி சுவாமிக்கு தலைமுடிகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த தலைமுடிகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு ரூ.50 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது.
இருப்பினும் உலக சந்தையுடன் மதிப்பிடும்போது இந்த விலை குறைவு என கருதி ஆன்லைனில் ஏலம் விடமுடிவு செய்யப்பட்டது. அதன்படி மும்பையில் உள்ள எம்.எஸ்.டி.சி. நிறுவன உதவியுடன் ஆன்லைனில் கடந்த ஆண்டு ஏலம் விட்டது. இதில் ஆண்டுக்கு ரூ.150 கோடி கூடுதல் லாபத்துடன் ரூ.200 கோடிக்கு தலைமுடி ஏலம் போனது. ஆனால், ஐந்தாவது ரக தலைமுடி மட்டும் ஏலம் போகவில்லை. இது தேவஸ்தான நிர்வாகத்துக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரக முடி 260 டன் தேங்கியுள்ளது.
எனவே, ஐந்தாவது ரக தலைமுடியின் இருப்பை குறைப்பதற்காக, ஏலத்துக்கான நிர்ணய விலையை குறைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கிலோ ரூ.80 என நிர்ணயம் செய்யப்பட்ட விலையை தேவஸ்தான நிதித்துறை அதிகாரிகள் ரூ.10 குறைத்து ரூ.70க்கு ஏலம் விட பரிந்துரை செய்துள்ளனர். அடுத்த மாதம் நடைபெறும் ஏலத்தில் ரூ.70 விலையில் ஐந்தாவது ரக தலைமுடியை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!