தனியாக பயணம் செய்ய டெல்லி பாதுகாப்பில்லை... ஆய்வில் தகவல்
பயணம் என்பது பலவிதங்களில் பெண்களுக்கு ஏற்படுகிறது. பணி நிமித்தமாகவோ, விடுமுறையை கழிக்கவோ சாலைகளில் பயணம் செய்தாக வேண்டியுள்ளது. இந்த பயணம் பாதுகாப்பானதாக உள்ளதா? என்பது பற்றியும், எந்த நகரத்தின் சாலைகள் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்றது என்றும் டிரிப் அட்வைஸைர் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
94 சதவிகித பெண்கள் தங்களின் பயணத்தின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதாக கூறியுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் கூட அந்த பயம் நீடிப்பதாகவும் கூறியுள்ளனர். 6 சதவிகித பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்ல பயப்படுவதாக கூறியுள்ளனர். 24 சதவிகித பெண்கள் இந்தியாவில் தனியாக பயணிக்க அச்சப்படுவதாக கூறியுள்ளனர்.
இந்திய சாலைகளில் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று 50
சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கருதுகிறார்கள். இதில் மற்ற
பெருநகரங்களைக் காட்டிலும் டெல்லி நகரம் தான் மிகவும் பாதுகாப்பற்றது
என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தன்னம்பிக்கை அதிகரிப்பு
இந்த ஆய்வில் பணிபுரியும் பெண்கள், சுய தொழில் செய்பவர்கள், இல்லத்தரசிகள் பங்கேற்றனர். பழங்காலத்தில் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியேற அச்சப்படுவார்கள். அதனை உடைக்கும் வகையில் இன்றைக்கு அநேகம் பெண்கள் தன்னம்பிக்கையோடு தனியாக பயணம் செய்வதை விரும்புகின்றனர்.
தனியாக பயணம்
விடுமுறை நாட்களில் தனியாக சந்தோசமாக பயணிக்க விரும்புவதாக 76 சதவிகிதப் பெண்கள் கூறியுள்ளனர். 41 சதவிகித பெண்கள் பணி நிமித்தமாக தனியாக பயணிப்பதை விரும்புவதாக கூறியுள்ளனர். 34 சதவிகித பெண்கள் தனியாக பயணிப்பதையும், பிரமிப்பூட்டும் பயணத்தையும் விரும்புவதாக கூறியுள்ளனர்.
இரவில் பயணிப்பது ரிஸ்க்
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்போது, சாலைகளில் தனியாக பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்று 50 சதவீதம் பெண்கள் கருத்து தெரிவித்தனர். இரவு நேரத்தில் தனியாக பயணம் செய்ய பயப்படுவதாக 73 சதவீதம் பெண்கள் தெரிவித்தனர்.
கொல்கத்தா பாதுகாப்பானது
டெல்லி மற்றும் மும்பையில் உள்ளவர்களைக் காட்டிலும் கொல்கத்தா பெண்கள் சாலைகளில் பயணம் செய்வதை பாதுகாப்பாக கருதுகிறார்கள்.
டெல்லி பாதுகாப்பற்ற நகரம்
டெல்லி மிகவும் பாதுகாப்பற்ற நகரம் என்று 84 சதவீதம் பெண்கள் கூறினர். எனினும் மும்பையில் 74 சதவீதம் பெண்கள் மட்டுமே இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
சென்னைப் பெண்கள்
அதே சமயத்தில் சென்னையில் உள்ள பெரும்பாலான பெண்கள், தங்களுடைய நகரம் டெல்லியை காட்டிலும் பாதுகாப்பானது என்று கூறினர். எனினும் மும்பையை போல சென்னை அவ்வளவு பாதுகாப்பான நகரம் இல்லை என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆயுதங்களுடன் பயணம்
33 சதவிகித பெண்கள் தனியாக பயணிக்கும் போது மிளகாய்த்தூள், கத்தி போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பயணிப்பதாக கூறியுள்ளனர். பணி நிமித்தமாக பெரும்பாலான பெண்கள் தனியாக பயணம் செய்வது அதிகரித்துள்ளதாக டிரிப் அட்வைசர் இன்டியா நிறுவனத்தின் நிகில் கஞ்ஜூ கூறியுள்ளார். இதில் 78 சதவிகிதம் பேர் தங்கும் ஹோட்டல்களின் பாதுகாப்பு பற்றியும் கூறியுள்ளனர்.
பாதை பற்றிய விசாரணை
வெளியே புறப்படுவதற்கு முன்பு தாங்கள் செல்லும் வழியை பற்றி பெரும்பாலான பெண்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையே கேட்டு தெரிந்து கொள்கிறார்கள். முன்பின் தெரியாத சாலையில் போய்க் கொண்டிருக்கும்போது வழியை தெரிந்து கொள்ள இதே எண்ணிக்கையிலான பெண்கள் வழிப்போக்கர்களையே நம்பி இருப்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!