ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஆதிக்கம்...
பிளாக்பெரி தோல்வியால் சோகத்தில் மூழ்கும் நகரம்
ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கத்தால் அழிவின் விளிம்பில் நிற்கும் பிளாக்பெரி தோன்றிய நகர மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
கனடா தலைநகர் டொரான்டோவில் இருந்து 100 கி.மீ. தெற்கே உள்ள நகரம் வாட்டர்லூ. அங்குதான் ரிசர்ச் இன் மோஷன் (ரிம்) என்ற நிறுவனம் பிளாக்பெரி என்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பை தொடங்கியது. 20 ஆண்டுகளுக்கு முன் 1992ல் மைக் லசாரிடிஸ், ஜிம் பால்சிலி எனற இருவரின் முயற்சியால் வாட்டர்லூ நகரம், உலக தொழில்நுட்ப வரைபடத்தில் முக்கியத்துவம் பெற்றது.
ஒரு லட்சம் பேர் வசிக்கும் அந்த குட்டி நகரத்தில் அடுத்த சில ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சி. எங்கு திரும்பினாலும் பிளாக்பெரி ஸ்மார்ட்போன் போஸ்டர்கள், பேனர்கள். சொந்த கட்டிடங்களும், வாடகை கட்டிடங்களுமாக ரிம் நிறுவனத்தின் அலுவலகங்கள், போன் தொழிற்சாலைகள்தான் நகரின் மூலை முடுக்குகளில் எல்லாம் வியாபித்திருந்தன.
உலகம் முழுவதும் பரந்து விரிந்தது அதன் போன் சாம்ராஜ்யம். உள்ளூர் தொழிலதிபர் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா வரை பிளாக்பெரி போன் வைத்திருப்பதை கவுரவமாக கருதியதுண்டு. 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 16,500 ஊழியர்கள். அதில் வாட்டர்லூ நகரில் மட்டும் 9,000 பேர். இப்படி உலா வந்த பிளாக்பெரி கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த 3 மாதத்தில் நஷ்ட கணக்கை வெளியிட்டுள்ளது.
காரணம், ஆப்பிள் ஐபோன், கூகுளின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருகை. கடந்த ஆண்டில் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் 11 சதவீதமாக இருந்த பிளாக்பெரி, கடந்த 3 மாதங்களில் 5 சதவீதமாக இறங்கி விட்டது. இதனால், 5,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளது நிர்வாகம்.
இதுதான் வாட்டர்லூ நகர மக்களின் சோகத்துக்கு காரணம். நகரின் பெயரும் அதற்கு காரணமாக இருக்கலாம்... ஆம், வாட்டர்லூ என்றால் மோசமான தோல்வி என்றும் பொருள்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!