Monday, July 2, 2012


பவழப்பாறைகளை காப்பாற்றும் கடற்புற்கள்


சிலவகை கடற்புற்களை வளர்ப்பதன் மூலம் வேகமாக அழிந்துவரும் பவழப்பாறைகளை காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கடலில் இருக்கும் பவழப்பாறைகள், கடந்த 40 ஆண்டுகளாக வேகமாக அழிந்துவருகின்றன. பூமியானது வேகமாக வெப்பமடைவது தான் இதற்கான காரணமாக கருதப்படுகிறது. அதாவது மனிதனும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவு வேகமாக அதிகரித்து சுற்றுசூழலில் கார்பனின் அளவை அதிகப்படுத்துகிறது. இப்படி சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் கார்பன், கடல்நீரிலும் அதிகரிக்கும் போது கடல்நீரின் அமிலத்தன்மையும் கூடுகிறது.
இப்படி கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது, அது பவழப் பாறைகளை அழிக்கிறது. காரணம் பவழப்பாறைகளை உருவாக்கும் சுமார் ஒரு சென்டிமீட்டர் நீளமுள்ள புழுவைப்போன்ற தோற்றமுடைய கடல்வாழ் உயிரினம், ஆரோக்கியமாக வாழ்ந்தால் தான் அவை சுரக்கும் வேதிப்பொருள் பவழப்பாறையாக வளரும். கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரித்தால் இந்த புழுக்கள் அதில் வாழமுடியாது என்பது ஒருபக்கம் இருக்க, அவை உருவாக்கும் பவழப்பாறைகளும் இந்த அமிலத்தன்மை மிகுந்த தண்ணீரில் கரைந்து காணாமல் போய்விடும்.
ஆக்ஸ்போர்ட், ஸ்வான்ஸி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் குக் பல்கலைக்கழகங்கள் இணைந்து செய்த ஆய்வில், குறிப்பிட்ட சிலவகை கடற்புற்கள், கடல் நீரில் இருக்கும் கார்பனை மிகவேகமாக உள்வாங்கிக் கொள்வதன் மூலம் கடல்நீரின் அமிலத்தன்மையை குறைக்கின்றன. இது பவழப்பாறைகளின் அழிவை தடுப்பதுடன், அவை ஆரோக்கியமாக வளரவும் வழி செய்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடந்து எங்கெல்லாம் பவழப்பாறைகள் வேகமாக அழிந்து வருகிறதோ அந்த பகுதியில் இந்த குறிப்பிட்ட கடற்புற்களை வளர்க்கலாம் என்கிறார் அவர்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!