மூன்று நாடுகள், மூன்று கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர்: நடுக்கடலில் ஒரு சாகச மீட்பு!
கடந்த மாதம் 24-ம் தேதியில் இருந்து பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த 52 பயணிகளும் நேற்று (வியாழக்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இவர்கள் பயணித்த ரஷ்ய கப்பல், பனிக்கட்டிகளுக்கு இடையே இன்னமும் சிக்கியபடி நிற்கிறது. அந்தக் கப்பலின் 22 மாலுமிகளும், தமது கப்பலிலேயே தங்கியுள்ளனர்.
52 பயணிகளையும் மீட்பதற்காக ஆஸ்திரேலிய கப்பலும், சீன கப்பலும் அங்கு சென்றிருந்தன என்றும், மீட்புப் பணியின்போது சீனக் கப்பலும் பனிக் கட்டிகளிடையே சிக்கி விட்டது எனவும் நேற்று வெளியிட்டிருந்தோம் அல்லவா?
சீனக் கப்பல் தற்போதும் பனிக்கட்டிகளிடையே சிக்கியுள்ள நிலையில் அசைய முடியாது சிக்கியுள்ளது என்ற போதிலும், அந்தக் கப்பலின் உதவியுடன்தான் இந்த 52 பயணிகளும் மீட்கப்பட்டனர். அது எப்படியென்றால், சீனக் கப்பலில் இருந்த ஒரு ஹெலிகாப்டர் மூலமாகவே ரஷ்யக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு ஆஸ்திரேலிய கப்பலில் ஏற்றப்பட்டுள்ளனர்.
மொத்தம் 12 பயணிகள்தான் ஹெலிகாப்டரில் ஏற முடியும் என்பதால், பயணிகளுக்காக 5 ட்ரிப்பும், அவர்களது உடமைகளுக்காக இரு ட்ரிப்களும் அடித்தது ஹெலிகாப்டர்.
மீட்கப்பட்ட பயணிகள் ஆஸ்திரேலிய கப்பலில் கிளம்பி விட்டார்கள். ஆனால், அவர்கள் வீடு சென்று சேர இன்னமும் பல வாரங்கள் எடுக்கும். காரணம், இந்த ஆஸ்திரேலிய கப்பல், அவர்களது கேசி-அன்டார்க்டிக் கடல்தளம் சென்று எரிபொருள் நிரப்பி கொண்டுதான், ஆஸ்திரேலியாவின் தெற்கு துறைமுகமான ஹோபார்ட்டை சென்றடையும். அதற்கு சில வாரங்கள் பிடிக்கும்!
பனிக்கட்டிகளுக்கு நடுவே கப்பலை விட்டுவிட்டு அனைவரும் வெளியேறிவிட்டால், கப்பல் சேதமடைந்து விடலாம் என்ற காரணத்தால், கப்பல் கேப்டனும், 21 மாலுமிகளும் தாம் ஹெலிகாப்டரில் வரவில்லை என்று கூறிவிட்டு கப்பலில் தங்கியுள்ளனர். பனிக்கட்டிகளுக்கு இடையேயிருந்து கப்பல் மீட்கப்படும்போதுதான், அவர்கள் மீட்கப்படுவார்கள்.
மூன்று நாடுகள், மூன்று கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் தொடர்புபட்ட இந்த மீட்பு நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து தந்துள்ளோம்.
கப்பலுக்கு வெளியே கடலின் மேல்ப்பகுதி ஐஸ் பாளமாக மாறியுள்ள நிலையில் ஐஸில் ஹெலிகாப்டர் இறங்குவதை 1-ம் போட்டோவில் பாருங்கள். ஹெலிகாப்டர் வந்து இறங்குவதை கப்பலின் மேல் தளத்தில் உள்ள பயணிகள் பார்ப்பதை 2-வது போட்டோவிலும், உதவி வந்துவிட்டது என பயணிகள் ஒரு ‘ஆட்டம் போடுவதை’ 3-வது போட்டோவிலும் பாருங்கள். (சந்தோஷமாக இருக்காதா அவிங்களுக்கு?)
கடலின் மேற்பகுதியில் பனிக்கட்டிக்கு மேல் எப்படி தற்காலிக ஏற்பாடு செய்து ஹெலிகாப்டரை இறக்கினார்கள் என்பதை 4-வது போட்டோவை பாருங்கள். 5-வது போட்டோவில் பயணிகள் ஹெலிகாப்டரில் ஏறுவதை காணலாம்.
6-வது போட்டோவை அவசியம் பாருங்கள். மீட்கச் சென்ற கப்பல் எப்படி ஐஸ் பாளங்களில் சிக்கியுள்ளது என்பதை, வானில் இருந்து பார்த்தால்தான் நிலைமை புரியும் என்பதால், 6-வது போட்டோவாக அதையும் இணைத்துள்ளோம்.
அய்யா ஆஸ்திரேலியா கேப்டனே… ஐஸ் பாறைகளில் மோதாமல் சாக்கிரதையாக ஓட்டிகிட்டு போங்கப்பு!
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!