பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து கடலில் விழுந்த பயணி! தேடுதல் தீவிரம்!!
பயணி கடலில் வீழ்ந்தபின் பத்திரமாக தரையிறங்கிய விமானம்.
|
நேற்று மதியம் மயாமி ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் இருந்த அதிகாரிக்கு, விமானம் ஒன்றில் இருந்து விசித்திரமான ரேடியோ அழைப்பு ஒன்று வந்தது. “கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்த எனது விமானத்தின் கதவை திறந்த ஒருவர், கடலுக்குள் விழுந்து விட்டார்” என்பதே, அதிர வைக்கும் அந்த விசித்திர தகவல்.
முதலில் இதை சரியாக கிரகித்துக் கொள்ள முடியாத ஏர்-ட்ராபிக் கன்ட்ரோலர், “பறந்து கொண்டிருக்கும் உங்கள் விமானத்தின் கதவு திறந்து விட்டது என்றுதானே சொல்ல வருகிறீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த விமானி, “அதுவல்ல, பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் கதவு திறந்து, பயணி ஒருவர் கடலில் விழுந்து விட்டார்” என்றார் விளக்கமாக.
சிவில் ஏவியேஷனில் மிகவும் அரிதான சம்பவம் இது. நேற்று மாலையில் இருந்து மயாமி கடல் பகுதியில் விமானம் மற்றும் படகுகளின் உதவியுடன், கடலுக்குள் விழுந்த பயணியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள், மீட்புப் படையினர்.
நேற்று மதியம் 1.30 மணிக்கு நடந்துள்ளது இந்த சம்பவம். கென்டல்-தமயாமி விமான நிலையத்தில் இருந்து, பைப்பர் PA-46 ரக விமானத்தை செலுத்திச் சென்ற விமானி ஒருவரே, ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவரை தொடர்பு கொண்டு இந்த அசம்பாவிதத்தை தெரிவித்தார்.
அந்த விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விபரம் சரியாக தெரியவில்லை.
வானில் பறந்து கொண்டிருக்கும்போது, பயணி எதற்காக கதவைத் திறந்தார் என்ற தகவலும் இல்லை. ஆனால், நடந்த சம்பவம் நிஜம்தான், ஒருவர் விமானத்தில் இருந்து கடலுக்குள் விழுந்து விட்டார் என்பதை விமான போக்குவரத்து துறை உறுதி செய்துள்ளது.
மயாமி போலீஸ் செய்தித் தொடர்பாளர் டிடெக்டிவ் ஜாவியர் பேஸ் கூறுகையில், “கரையில் இருந்து பல மைல் தொலைவில் கடலுக்குள் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்து ஒருவர் விழுந்து விட்டார் அல்லது, குதித்து விட்டார் என்பதே தற்போது எம்மிடம் உள்ள தகவல்.
விசாரணையின் முடிவில்தான் என்ன நடந்தது என்று சரியாக சொல்ல முடியும். இந்த வழக்கை புலனாய்வுத்துறை எஃப்.பி.ஐ. எடுத்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார்.
சம்பவம் நடந்தபோது விமானம் 1,800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அவ்வளவு உயரத்தில் இருந்து கடலில் விழுந்த ஒருவர், உயிர் பிழைத்திருப்பாரா என்பதே சந்தேகத்துக்கு உரிய விஷயம்! விமானியின் பெயரையோ, விழுந்த பயணியின் பெயரையோ சிவில் விமானத்துறை இதுவரை வெளியிடவில்லை.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது இப்படி ஒரு சம்பவம் நடந்தால், விமானிக்கும், ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவருக்கும் இடையே நடக்கும் ரேடியோ உரையாடல் எப்படி இருக்கும் என்று கேட்க உங்களுக்கு ஆவலா?
நேற்று மாலை மயாமி ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவரில் மதியம் 1.30 மணிக்கு நடந்த உரையாடல்களின் ஆடியோ பதிவை தருகிறோம். நீங்களே கேட்டுப் பாருங்கள்.
மற்றொரு விஷயம். உங்களில் எத்தனைபேர், பறந்து கொண்டிருக்கும் விமானிகளும், தரைக்கட்டுப்பாட்டு மையமும் நடத்தும் உரையாடல்களை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை. அதனால், நேற்று மதியம் 1.30 மணியில் இருந்து வெவ்வேறு விமானிகள், டவருடன் செய்த உரையாடல்களின் 30 நிமிட ஒலிப்பதிவை தருகிறோம்.
பயணி விழுந்த விமானத்தின் விமானி பேசியவை இதில் 53-வது விநாடியில் இருந்து உள்ளது. அந்த உரையாடல் முடிந்தபின் (சுமார் 2 நிமிட உரையாடல்தான்), அதன்பின் அங்கு பறந்த மற்றைய விமானங்களின் விமானிகளின் உரையாடல்கள் சுமார் 25 நிமிடங்கள் உள்ளன. அவற்றுக்கும், இந்த செய்திக்கும் தொடர்பில்லை.
ஆர்வம் உள்ளவர்கள் கேட்கலாம் என்பதால், வெட்டாமல் முழுமையாக தருகிறோம்.
மயாமி போன்ற பிசியான இடத்தில், ஒரே நேரத்தில் சுமார் 50 விமானங்களாவது, டவரின் தொடர்பு எல்லைக்குள் பறந்து கொண்டிருக்கும். டவரில் இருப்பவர்கள், மாறி மாறி ஒவ்வொரு விமானிக்கும் (அனேக விமானங்கள், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் என்பதை கவனிக்கவும்) “உயரத்தை அதிகரியுங்கள், இடது புறம் திரும்புங்கள்”, என்றெல்லாம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பதை கேட்கவும்.
சம்பவம் நடந்தபின் விமானம் பார்க் பண்ணப்பட்டுள்ளதை காணலாம்.
அந்த போட்டோவை கிளிக் செய்தால், ஏர்-ட்ராபிக் கன்ட்ரோலர்கள், விமானிகளுடன் நேற்று 1330 மணிக்கு பேசிய ஒலிப்பதிவை கேட்கலாம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!