வேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம்: ராஜபாளையம் மாணவிகள்!
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே வேறு ஜாதியினர் சமைக்கும் உணவை சாப்பிட மாட்டோம் என நடுநிலைப்பள்ளி மாணவிகள் கடந்த ஒரு வருடமாக சத்துணவை புறக்கணித்து வருகின்றனர்.
ராஜபாளையம் அருகேயுள்ளது கே.கம்மாபட்டி கிராமம். இங்குள்ள கிராமத்தில் 200 வீடுகள் இருக்கின்றன. அங்கு வசிக்கும் அனைவரும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஸ்ரீவில்லிப்புத்து£ர் யூனியனுக்கு சொந்தமான அரசு துவக்கப்பள்ளி இங்குள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 50 மாணவர்களும், 25 மாணவிகளும் இந்த பள்ளியில்தான் படிக்கின்றனர். மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது. கடந்த ஒராண்டுக்கு முன்பு வரை ராஜகம்பளத்தை சேர்ந்த ஒரு வயதான பெண்மணிதான் சத்துணவை சமைத்து போட்டு வந்தார். அவர் பணியிலிருந்து விலகிய பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது.
கே.கம்மாபட்டி கிராமத்தில் உள்ள தொடக்கபள்ளியில் காலியாக இருந்த சத்துணவு சமையல்காரர் மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மரகதவள்ளி (25) என்பவர் சமையல்காரராகவும், சரவணக்குமாரி (30) என்பவர் சமையல் உதவியாளராகவும் அரசு நியமனம் செய்தது. கடந்த 30.7.12 அன்று பள்ளி மாணவர்களுக்கு ஆசையாக மதிய சத்துணவை சமைத்து விட்டு மாணவர்களை சாப்பிட அழைத்தனர். ஆனால், 'பிற ஜாதியினர் சமைத்த சாபப்பாட்டை எங்கள் பிள்ளைகள் சாப்பிட்டால் தீட்டு வரும்' என்று சொல்லி பெற்றோர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து சென்று விட்டனர்.
பின்னர் சமைத்த சாப்பாட்டை மாடுகளுக்கு போட்டு விட்டு சத்துணவு பணியாளர்கள் வீடுகளுக்கு திரும்பினர். உடனே இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. கலெக்டர், சத்துணவு திட்ட அதிகாரிகள் எல்லோரும் பேச்சு வார்த்தை நடத்தியும். கே.கம்மாபட்டி ஊர் மக்கள், 'வேறு ஜாதியினர் சமைத்த சத்துணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள்' என்று சொல்லி தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். ஆனால் சத்துணவு பணியாளர்கள் தினமும் சத்துணவை சமைத்து விட்டு பிள்ளைகளுக்காக காத்திருப்பதும், பிறகு சாப்பாட்டை கீழே கொட்டுவதும் என இப்போது வரை வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி சத்துணவை புறக்கணிக்கும் போராட்டம் தொடங்கியது. இப்போது ஒராண்டு கடந்தும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 11.7.13 அன்று சத்துணவு திட்ட இணை இயக்குனர் வசந்தி, இந்த கிராமத்துக்கு சென்று ஊர் பெரியவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போதும் அவர்கள் பழைய பல்லவியை பாடியிருக்கின்றனர்.
பிறகு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும் என்று எச்சரித்த பிறகு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டும் சத்துணவு சாப்பிடட்டும், மாணவிகள் சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லி அனுப்பினார்களாம். இப்போது 23 மாணவர்கள் மட்டுமே சத்துணவு சாப்பிடுகிறார்கள். மாணவிகள் எப்போதும் போல் சத்துணவை புறக்கணித்து வருகின்றனர்.
எல்லாம் ஜாதி படுத்தும்பாடு. வேறு என்னத்தை சொல்ல?
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!