Friday, August 2, 2013

ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினார் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தந்தது ரஷ்யா

ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினார் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தந்தது ரஷ்யா




அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட அந்நாட்டு முன்னாள் அதிகாரி எட்வர்டு ஸ்னோடெனுக்கு, ரஷ்யா அடைக்கலம் அளித்துள்ளது. இதனால் மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியிருந்த அவர், அங்கிருந்து வெளியேறினார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தூதரங்கங்களை உளவு பார்த்துவரும் விஷயத்தை, அதன் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரியான எட்வர்டு ஸ்னோடென், ஹாங்காங்குக்கு தப்பி வந்து வெளியிட்டார். அவரை கைது செய்ய அமெரிக்க நடவடிக்கையில் இறங்கியபோது, ஹாங்காங்கில் இருந்து ஜூன் 23ல் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றார்.

ஆனால், அவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுக்காத நிலையில், விமான நிலையத்திலேயே அவர் தங்கியிருந்தார். அங்கிருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிடம் அவர் அடைக்கலம் கேட்டு கோரிக்கை விடுத்தார். ஆனால், இந்த நாடுகள் அவருக்கு அடைக்கலம் தர மறுத்துவிட்டன. இதனால் மாஸ்கோ விமான நிலையத்திலேயே தொடர்ந்து அவர் தங்கியிருந்தார்.

இந்நிலையில், ஸ்னோடெனுக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம் அளித்துள்ளது. இதையடுத்து விமான நிலையத்தில் இருந்து நேற்று அவர் வெளியேறினார். இத்தகவலை அவரது வக்கீல் அனடோலி குசரேனா தெரிவித்தார். எனினும், விமான நிலையத்தில் இருந்து அவர் எங்கு சென்றார் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். அமெரிக்காவின் ரகசியங்களை இனி வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம் அளித்துள்ளது. இதை ஸ்னோடென் ஏற்றுக் கொண்டுள்ளார்.

எக்ஸ்ட்ரா தகவல்

2012 வரையில், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்கள் 4.52 கோடி. இதில் 1.54 கோடி பேர் அகதிகள். 9.37 லட்சம் பேர் அடைக்கலம் தேடி சென்றவர்கள்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!