நல்லவேளை... எனக்கு எய்ட்ஸுன்னு சொல்லாம விட்டாங்களே! - வதந்திகள் குறித்து கனகா கமெண்ட்!
நல்லவேளை... என்னைப் பத்தி வதந்தி பரப்பினவங்க எனக்கு எய்ட்ஸுன்னு சொல்லாம விட்டாங்களே, என கமெண்ட் அடித்து சிரித்தார் நடிகை கனகா. தென் இந்திய மீடியாவை நேற்று முழுக்க கலக்கியது நடிகை கனகா குறித்த செய்திகள்தான். கனகா புற்றுநோயால் உருக்குலைந்து போய், ஆலப்புழாவில் அநாதைகளுக்கான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கடந்த சில தினங்களாக பரவிய வதந்தி, நேற்று உச்சத்துக்குப் போய் அவர் கேரளாவிலேயே இறந்துவிட்டதாய் பரபரப்பைக் கிளப்பியது.
நலமுடன் நேரில் தோன்றிய கனகா
ஆனால் அடுத்த சில மணி நேரத்துக்குள் கனகா சென்னையில் அனைத்து நிருபர்கள் முன்னிலையிலும் நல்ல ஆரோக்கியம் ப்ளஸ் முன்னிலும் அழகாக நேரில் தோன்றி தனக்கு ஒன்றுமில்லை என்றும், தன்னைப் பற்றி சிலர் வேண்டுமென்றே வதந்தி பரப்பியதாகவும் குற்றம் சாட்டினார்.
நல்ல வேளை எய்ட்ஸுன்னு சொல்லாம போனாங்களே...
நிருபர்களிடம் பேசிய அவர், "நான் கேரளாவில் சிகிச்சை பெறவில்லை. சென்னையில் உள்ள எனது வீட்டில் தான் இருக்கிறேன். எனக்கு புற்றுநோய் என்று வதந்தியைப் பரப்பியுள்ளனர். நல்ல வேளை எய்ட்ஸ் என்று செய்தி பரவாமல் இருந்ததே; அதுவே போதும்.
எல்லாம் அந்த தேவதாஸ் வேலை
இந்த வதந்திகளை என் தந்தை எனக்கூறிக்கொண்டு திரியும் தேவதாஸ்தான் பரப்பி விடுகிறார். இதையே சாக்காக வைத்து என்னை சந்தித்து பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கிறார். இல்லையென்றால் ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில் என்னைத்தேடி சரியாக சென்னையில் நான் இருப்பதை எப்படி அவரால் அறிந்து கொள்ள முடிகிறது.
ஆண்களைப் பிடிக்கவில்லை
என்னைத்தேடி ஆலப்புழாவுக்கு போகாமல் மிகச்சரியாக சென்னையில் உள்ள என் வீட்டிற்கு எப்படி வருகிறார். அவரை என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவுக்கு அவர் ஒருநாளும் அவர் நல்ல கணவராக நடந்துகொண்டதே இல்லை. எனக்கு ஒரு நல்ல தந்தையாக எந்நாளும் நடந்துகொண்டதில்லை. அவர் ஒரு பணப்பேய். அவரால்தான் எனக்கு ஆண்களைப் பார்த்தாலே பிடிக்காமலே போய்விட்டது. அதனால்தான் திருமணம் வேண்டாம் என முடிவெடுத்து தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.
பூனை, கோழிகளுடன்...
எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்க்கிறேன். நாய், கோழி இவற்றுடன்தான் வசிக்கிறேன். மனிதர்களை விட இவை எவ்வளவோ மேல். என் உதவிக்கு என் தேவைகளை கவனித்துக் கொள்ள என் வேலைக்காரி மட்டுமே உடனிருக்கிறார்.எக்காரணத்தைக்கொண்டும் எனக்கு தந்தை என்று கூறிவரும் தேவதாசை என் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன். என் அம்மாவுக்கு அவர் செய்த துரோகத்தை மன்னிக்கவே மாட்டேன்.
நடிகர்- நடிகைகள் தவிர்ப்பு
சில நடிகர், நடிகைகளிடம் நான் பேச முயற்சித்தேன். ஆனால் அவர்கள் ஏனோ என்னிடம் பேச விரும்பவில்லை. நானும் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. எனக்குப் பிடித்த உலகில் நான் வசிக்கிறேன்.
பயமில்லை..
எனக்கு எந்த பயமும் இல்லை. இவ்வளவு பெரிய வீ்ட்டில் வசிக்க பயமாக இருக்கிறதா என்று கேட்கிறீர்களே.. யாருக்காக எதற்காக பயப்பட வேண்டும். திருடனுக்கா... பேய் பிசாசுகளுக்கா... எத்தனையோ பேர் நகரை விட்டு ஒதுங்கி ஈசிஆர் ரோட்டில் பங்களா கட்டிக் கொண்டு வசிக்கிறார்கள். நான் பணக்காரி. ராஜா அண்ணாமலைபுரத்தில் சொந்த வீட்டில் வசிக்கிறேன். நான் எதற்கு பயப்பட வேண்டும்.
திருமணம் பற்றி பேச வேண்டாம்
என் திருமணம் பற்றிப் பேச வேண்டாம். நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பதுதான். திருமணம் பற்றி பேசவேண்டாம் என என் வக்கீல் சொல்லியிருக்கிறார். திருமணம் செய்து கொண்டே தீரவேண்டும் என்று கட்டாயமில்லையே. திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை இல்லாமலும் கூட வாழத்தானே செய்கிறார்கள்!
மீண்டும் நடிப்பேன்..
நல்ல கதை, கவுரவமான கேரக்டர்கள் கிடைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன். நடிக்க மாட்டேன் என எப்போதாவது நான் அறிவித்தேனா என்ன... ஆனால் நான் எந்த நிலையில் இருந்தாலும் அந்த தேவதாசை மட்டும் சேர்க்க மாட்டேன். இன்று கூட வீட்டு வாசல் வரை வந்த அவரை நான் துரத்திவிட்டேன். அவரை நான் பார்க்க விரும்பவில்லை. என் இறுதி மூச்சு வரை இதில் நான் உறுதியாக இருப்பேன்,'' என்றார்.
(சபாஷ் கனகா !!! நீங்கள் இந்த கொள்கையில் உறுதியாக உள்ள வரை உங்களது இந்த பேட்டி எமது பதிவில் உயிர்ப்புடன் இருக்கும்)
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!