Thursday, March 14, 2013

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே- உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே- உறுதிப்படுத்திய க்யூரியாசிட்டி



செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், சூழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராய அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலமானது அங்கிருந்து பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, அதன் மூலக்கூறுகள், வேதிக் கட்டமைப்பு தகவல்களை கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியது.

இதில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை வேதிப் பொருட்களான சல்ஃபர், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்டவைகள் தேவையான அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.




மேலும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் முன்னதாக நதியோ அல்லது ஏரியோ இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தது உண்மையே என்றும், எதிர்காலத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது.

க்யூரியாசிட்டிக்கு முன் செவ்வாய் கிரகத்தின் இன்னொரு பகுதியில் தரையிறங்கிய மார்ஸ் எக்ஸ்பிரஸ், அங்குள்ள மிகப் பெரிய ஆற்றின் படத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். இந்த ஆறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது ஈரமிக்க மணற்பரப்பும் ஆற்றின் வழித்தடமும் மட்டும் அப்படியே உள்ளதைப் படம் பிடித்திருந்தது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!