செம பார்மில் இருக்கும் சூரிய பகவான்... ஆரம்பமே 99 டிகிரி!: அப்ப அக்னி நட்சத்திர நாட்களில்?!
தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் ஆரம்பிக்க வேண்டிய கோடை வெயில் இப்போதே வாட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது.தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைந்துவிட்டது. மேலும் மாநிலம் முழுவதும் ஏரி, குளங்களில் கிரிக்கெட் விளையாட்டுக்கள் ஜோராக நடக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லை.
இந் நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. ஆகா, பரவாயில்லையே., மார்ச் மாசம் கூட மழை பெய்யுமே, வெயில் கம்மியாத்தான் இருக்கும் போல இருக்கு என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, சூரிய பகவான் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 99 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருச்சியில் 97 டிகிரியும், மதுரை, வேலூர் தஞ்சையில் 95 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.
கோடை காலத்தின் தொடக்கத்திலேயே 99 டிகிரி பதிவானதால் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் 110 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வேலூரில் தான் மிக அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் பதிவானது. மதுரை, திருச்சி, சேலம் ஆகிய பகுதியில் 100 டிகிரிக்கு மேல் பதிவானது நினைவுகூறத்தக்கது.
கோடை காலம் தொடங்கி விட்டதால் சர்பத் கடைகளில் கூட்டம் களை கட்டி வருகிறது. அதே போல இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றின் விற்பனையும் ஜோராக உள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!