நத்தைகளால் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முடக்கம்
சுவிஸ்சில் முந்நூறு மீற்றர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டமானது அந்தப் பகுதியில் வசிக்கும் அரிய வகை நத்தை இனங்களால் முடக்கப்பட்டுள்ளது.
பேசெல் நகருக்கு வெளியே இந்த ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்ட போது, அங்குப் பல வகையான நத்தைகள் ஊர்ந்து திரிவதைக் கண்டுள்ளனர். உடனடியாக உயிரியல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய ஆய்வில் girdled cinctella, succinella oblonga, pupilla muscorum போன்ற அரியவகை நத்தைகள் இருப்பதாகக் கண்டறிந்தனர்.
இவை அழிந்துவரும் இனங்களாக இருப்பதால் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. எனவே இவற்றை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
நத்தைகள் வாழும் மண் அதற்கு மிகவும் முக்கியம் என்பதால், அந்தப்பகுதி மண்ணை இடம் பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மண்ணும் அதில் வாழும் நத்தை இனங்களும் இடம்பெயர்ந்த பின்பு ரயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று பேசெல் திட்டத்துறை அதிகாரி ஜேன் ஹான் தெரிவித்தார்.
நத்தைகள் மண்ணோடு இடம்பெயரும் செய்தியை பேசெலில் உள்ள இயற்கை மற்றும் நிலப் பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் மைக்கேல் செம்ப் கூறினார்.
நத்தையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் மிகவும் கவனமாக இந்த இடப்பெயர்ச்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
17 மில்லியன் ஃபிராங்கில் திட்டமிடப்பட்ட இந்த ரயில்பாதைத் திட்டம் வரும் 2014ம் ஆண்டில் ஆரம்பிப்பதாக இருந்தது. இப்போது வரும் 2015ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் தன் பங்குக்கு இத்திட்டத்திற்கான செலவில் 40 சதவீதம் வழங்குவதாக ஒப்புக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!