Wednesday, April 24, 2013

கடனில் சிக்கி தீவுகளையே விற்கும் கிரீஸ் நாடும்.. கத்தார் நாட்டு ஷேக்கும்!


கடனில் சிக்கி தீவுகளையே விற்கும் கிரீஸ் நாடும்.. கத்தார் நாட்டு ஷேக்கும்!


கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாட்டு அரசு தனது சொத்துக்களையே விற்க ஆரம்பித்துள்ளது. இதில் கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான தீவுகள், கிரேக்க மாளிகைகள், கடற்கரைகளும் அடக்கம்.

கிரீஸ் கிரைசிஸ்.. கிரீஸ் பொருளாதார சரிவு.. கிரீஸ் திவால் ஆகிவிட்டது என்று பொதுவாக படிக்கிறோமே தவிர அதன் உண்மையான பிரச்சனை குறித்து முதலில் பார்ப்பது முக்கியம்.



பென்ஷனால் மூழ்கிய தேசம் இது... 

கிரீஸ் நாட்டைப் பொறுத்தவரை தனியார்மயம்- சோஷலிசம் என்ற கலவையான பொருளாதார முறையே அமலில் உள்ளது. அங்கு சில வருடம் மட்டும் அரசு ஊழியாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுவோர் மிக அதிகம். காரணம், ஊதியத்துக்கு இணையான பென்ஷனை அந்த நாட்டு அரசுகள் அள்ளிக் கொடுத்தது தான். இதனால் கொஞ்ச நாள் வேலையில் இருந்துவிட்டு விஆர்எஸ் கொடுத்துவிட்டு வீட்டிலேயே ஜாலியாக அமர்ந்தபடி பென்ஷனையே சம்பளம் அளவுக்கு வாங்கிக் கொண்டு வாழ்க்கையை என்ஜாய் செய்பவர்கள் மிக அதிகம்.


வருமான வரி தானே.. கட்டுவோம் கட்டுவோம்... 

மேலும் அந்த நாட்டின் பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பளமும் மிக மிக அதிகம். 1999-2007ம் ஆண்டுக்கு இடையே இந்த ஊழியர்களின் ஊதியம் 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. ஆனால், அரசாங்கத்தின் வரவுகள் அதிகரிக்கவே இல்லை. அது தேய்ந்து கொண்டே வந்தது. அதே போல வருமான வரி ஏய்ப்பும் அந்த நாட்டில் மிக மிக அதிகம். அதை அரசுகளும் பெரிய அளவில் கண்டுகொள்வதில்லை.


இதுல ஒலிம்பிக் போட்டி வேற... 

இதனால் வரவுக்கு மீறி செலவுகள் அதிகரித்தபோதும் அதை சமாளிக்க ஏராளமான கடனை வாங்கியது கிரீஸ். ஒரு கட்டத்தில் அதன் கடன் அளவுகள் அதன் ஒட்டுமொத்த வருவாய், சொத்துக்களின் அளவைக் கூட தாண்டிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் தான் 2004ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தியது கிரீஸ். இது தான் பொருளாதாரத்துக்கு சாவு மணி அடித்தது. கடன்களில் மூழ்கி இருந்த நாடு மேலும் கடனை வாங்கி ஒலிம்பிக்குக்காக பல நூறு பில்லியன்களை செலவு செய்து தனக்குத் தானே ஆப்பு அடித்துக் கொண்டது.


நாடே திவால்... 

ஆனாலும் மக்களை நெருக்கினால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது, ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால் அதை வெளியிலேயே காட்டாமல் கடனை மேலும் மேலும் வாங்கிக் குவித்தது அரசு. ஒருகட்டத்தில், வாங்கிய கடனுக்கு வட்டியைக் கூட கட்ட முடியாமல் கிரீஸ் நாடு திணறியது. அப்போது தான் கிரீஸ் நாட்டு நிதி நிலைமை வெளியுலகுக்கே தெரியவந்தது. இதனால் முதலில் அரசு வங்கிகள் திவால் ஆகின. தொடர்ந்து பிற வங்கிகளும், அரசு மற்றும் தனியார் தொழில்துறையும் முடங்கியது. முதலீடுகள் அடியோடு நின்றுபோய்விடவே வேலைவாய்ப்புகளும் குறைந்தன. இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து நாடு முழுவதும் வேலையில்லாதோர் போரட்டங்களில் குதிக்க அது அரசியல் சமூகப் பிரச்சனையாக மாறியது.


நிபந்தனை மேல் நிபந்தனை... 

வீட்டிலேயே ஜாலியாக படுத்தபடி பென்ஷனை வாங்கி செலவழித்தவர்களுக்கு அது நின்று போனது. ஊதியம் கூட தர முடியாமல் அரசு தவிக்கவே, மக்கள் உணவு வாங்கக் கூட காசில்லாமல் திணறும் நிலை உருவானது. கிரீஸ் நாட்டின் பொருளாதார திவால் நிலையால் யூரோவின் மதிப்பும் சேர்ந்து கீழே பாதளத்துக்குப் போகவே, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து கிரீஸ் நாட்டுக்கு உதவ முன் வந்தன. ஆனால், அவை மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்தன.


வெடித்தன போராட்டங்கள்... 

அதன்படி முதலில் அரசின் செலவுகளை பாதியளவுக்கும் மேல் குறைக்க வேண்டும் என்றன. இதனால் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்குக் கூட நிதியைக் குறைத்தது கிரீஸ். இதனால் மருத்துவமனைகளில் மருந்துகள் கூட இல்லாத நிலை உருவானது. அனைவரையும் ஒழுங்காக வருமான வரி கட்ட வைக்க வேண்டும் என்ற அடுத்த நிபந்தனையை ஐரோப்பிய யூனியன் விதித்ததால், மக்களிடம் வரி விஷயத்தில் அரசு கடுமை காட்ட ஆரம்பித்தது. வேலையே இல்லாமல் சோத்துக்கே திண்டாடும் வேலையில் வரி கட்டச் சொல்லி அரசு நெருக்கடி தந்ததால் போராட்டங்கள் வெடித்தன.


ஜெர்மனி போட்ட கண்டிஷன்... 

அடுத்ததாக கடன்களை உடனே அடைத்தால் தான் நிதியுதவிகளைத் தருவோம் என ஐரோப்பிய யூனியன் கூறிவிட, அதற்கான வேலைகளில் கிரீஸ் இறங்கியுள்ளது. இதற்காக அரசு வங்கிகள் கடன் பத்திரங்களை வெளியிட்டு மக்களிடமே பணத்தை வசூல் செய்து வெளிநாட்டுக் கடன்களை அடைக்க முயன்றது கிரீஸ்.

ஆனால், அதை வாங்க ஆள் இல்லை. இதனால் அடுத்தபடியாக ஐரோப்பிய யூனியன், குறிப்பாக அந்த யூனியனின் மிக பலம் வாய்ந்த நாடான ஜெர்மனி, போட்டுள்ள நிபந்தனையை அமலாக்கும் வேலையில் இறங்கியுள்ளது கிரீஸ். இந்த நிபந்தனையின்படி நாட்டின் அனைத்துத் துறைகளையும் கிரீஸ் தனியார்மயமாக்க வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே 10 பில்லியன் டாலர் அளவுக்கு நிதி தருவோம் என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறிவிட்டது ஜெர்மனி.


அரசின் சொத்துக்கள் ஏலத்துக்கு... 

இந்த நிபந்தனையை அமலாக்க தனது சொத்துக்களையே, கிரீஸ் தனியாருக்கு விற்க ஆரம்பித்துள்ளது. அதாவது நாட்டையே விற்க ஆரம்பித்துள்ளது. இதன்படி தன்னிடம் உள்ள 70,000 அரசுச் சொத்துக்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது கிரீஸ் நாடு. இதில் மிகப் பழமை வாய்ந்த கிரேக்க மாளிகைகள், கடற்கரைகள், தீவுகள், அரசின் கேளிக்கை விடுதிகள் ஆகியவையும் அடங்கும். ரோட் ஐலெண்ட் எனப்படும் மிகப் பெரிய, மிகப் பிரபலமான தீவையும் விற்க முடிவு செய்துள்ளது கிரீஸ்.


ராணி எலிசபத்தின் கணவரின் மாளிகையும் விற்பனை... 

அதே போல ஏஜியன் கடல் பகுதியில் உள்ள மிகப் பெரிய கடற்கரையையும் விற்கிறது கிரீஸ். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கமாகும். மேலும் கடல் சர்பிங்குக்கு பேர் போன peninsula of Prasinisi கடற்கரையையும் விற்கப் போகிறது அந்த நாடு. மேலும் இங்கிலாந்து ராணி எலிசெபத்தின் கணவரான மன்னர் பிலிப் பிறந்த கிரேக்க மாளிகையும் விற்பனைக்கு வந்துள்ளது.


காத்தார் நாட்டு ஷோக்கின் ஷோக்கு!: 

இதில் கத்தார் நாட்டைச் சேர்ந்த பில்லியனரான ஷேக் ஒருவர் கிரீஸ் நாட்டின் 6 தீவுகளை விலைக்குப் பேசிவிட்டார். அதை விரைவில் வாங்கவுள்ளார். அதே போல ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் தனது மகளுக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க ஒரு தீவை 100 மில்லியன் டாலருக்கு விலை பேசி முடித்துள்ளார்.


100ல் 25 பேருக்கு வேலை இல்லை 

கிரீஸ் நாட்டில் இப்போது 100 பேரில் 25 பேருக்கு வேலை இல்லாத நிலையில், வேலையில் இருப்போரில் 50 சதவீதம் பேருக்கு பாதி சம்பளமே வரும் நிலையில், இந்தக் கொடுமைகளை எல்லாம் அந்த மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 2ம் உலகப் போரில் ஹிட்லர் கிரீஸ் நாட்டை ஆக்கிரமித்தார். இப்போது ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மெர்க்கலும் அதையே தான் செய்கிறார். அவர் 2வது ஹிட்லர் என்கின்றனர் கிரீஸ் நாட்டினர். ஆனால், இந்த ஹிட்லர் நமது ஒரே ஆபத்பாந்தவன் என்கிறது கிரீஸ் அரசு. உண்மை தானே.














No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!