சீனாவில் கடுமையான நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 200ஆனது! 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம்!
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிச்சுவான் மாகாணம் லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் நேற்று காலை காலை 8.02 மணிக்கு 13 கி.மீ. ஆழத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் அனைவரும் கட்டடங்களிலிருந்து வெளியேறி சாலையில் குவிந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200ஆக அதிகரித்துள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிச்சுவான் மாகாண தலைநகர் செங்டுவிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. அங்கிருந்த விமான நிலையத்தில் உள்ள கட்டடங்களில் சிறிய அளவில் சேதமேற்பட்டதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. லெஷான், சோங்கிங், குயிசோவ், கான்சு, ஷான்ஸி, யுனான் உள்ளிட்ட நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. 6000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவினர் யான் நகருக்கு விரைந்துள்ளனர். நிலைமையை நேரில் பார்வையிட சீனப் பிரதமர் லீ கெகியாங் யான் நகருக்குச் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
இதற்கு முன்பு, இதே சிச்சுவான் மாகாணத்தில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போது 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8 அலகுகளாக பதிவானது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!