Friday, May 9, 2014

அமெரிக்க உளவுத்துறை NSA, மர்மமாக ஏதோ சொல்லி உங்களை சூடேற்றுகிறார்கள், இல்லையா?

அமெரிக்க உளவுத்துறை NSA, மர்மமாக ஏதோ சொல்லி உங்களை சூடேற்றுகிறார்கள், இல்லையா?



அமெரிக்க உளவுத்துறை NSA, விரிவாக்கம், National Security Agency, தமது ட்விட்டர் பக்கத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை ட்விட் ஒன்றை தட்டிவிட்டது. அதில், “tqfjhcdlfdbte” என எதுவுமே புரியாத சொற்களை சேர்த்த வாக்கியங்கள் (மேலே போட்டோ பார்க்கவும்) இருந்தன. இதைப் பார்த்து இன்டர்நெட்டே கிறுகிறுத்து போயிருக்கும்.

என்னங்க சமாச்சாரம் இது?

1) சனி, ஞாயிறு நடந்த பார்ட்டிகளில் ஏற்பட்ட போதை தெளியாமல், திங்கள் காலை NSA ஆபீஸூக்கு யாரோ வந்து விட்டார்களா?

2) ஆபீஸில் யாரோ ஒருவருடைய கம்ப்யூட்டர் கீ-போர்ட்டின் மீது,  பூனை ஓடியதா?

3) எட்வார்ட் ஸ்னோடன் ரகசியங்களை அடித்துச் சென்ற ரகசியங்களால் விரக்தியில் உள்ள ஏஜென்சி, அந்த குழப்பத்தில் தமது அதி ரகசிய சங்கேத வார்த்தை ரகசியம் ஒன்றை கை தவறி, நெட்டில் தட்டிவிட்டு விட்டார்களா?

4) அல்லது, நம்மூரில் நடப்பது போல, அமைச்சரின் மூணாவது சம்சாரத்தின், மூணாம் கிளாஸ் படித்த சித்தி பொண்ணு, சிபாரிசில் பணியில் சேர்ந்து, அந்தம்மா இப்படித்தான் வேலை பழகுகிறாங்களா?

உளவுத்துறைக்கு வெளியேயும் துடிப்பான ஆட்கள் உள்ளார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக, NSA-வின் இந்த ட்வீட் வெளியாகி ஓரிரு மணி நேரத்திலேயே, இந்த மர்மத்துக்கான விடை தெரியவந்து விட்டது! அடேங்கப்பா!

மர்மத்துக்கான விடை என்னவென்றால், கோட்-வேர்டுகளில் எழுதப்படும் ரகசிய மெசேஜ்களை உடைக்கக்கூடிய ஆட்களை பணியில் அமர்த்த தேடிக்கொண்டு இருக்கிறது உளவுத்துறை. அதற்கான விளம்பரத்தை, கோட்-வேர்டுகளிலேயே கொடுத்தால், எத்தனை பேர் புரிந்து கொள்வார்கள் என்பதை பார்க்கும் முயற்சிதான் இது.

அதாவது, “இதையே உங்களால் புரிந்துகொள்ள முடியலைன்னா.. வேலைக்கு அப்ளை பண்ணாதிங்க பிளீஸ்” என்கிறார்கள்.

கோழி கிளறியதுபோல எழுத்துக்களை குலுக்கிப்போட்டு இவர்கள் ட்வீட் செய்த மெசேஜிலுள்ள எழுத்துக்களை ஒரு ஃபுளோவில் வெவ்வேறு எழுத்துக்களாக ரீபிளேஸ் செய்தால், சரியான ஆங்கில சொற்களாக மாறி, முழுமையான வாக்கியங்களாக அவை அமையும். அதாவது, அவர்களது ட்வீட் தனவலை டீ-கோடிங் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால் அதன் அர்த்தம்:

NSA-வில் எப்படி வேலை எடுக்கலாம் என அறிய ஆவலா? மே மாதத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் அனுப்புட் ட்வீட்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். எங்கள் தேசத்தை பாதுகாக்க, எம்முடன் (NSA) பணியில் இணைய வாருங்கள்”

வேலைக்கு ஆளெடுக்கிறாங்க சார்!

பல மீடியாக்கள் இது தொடர்பாக உளவுத்துறை NSA-வை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர்களது செய்தி தொடர்பாளர் மார்சி மில்லர், “அந்த ட்வீட், புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் எமது அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளது போல, இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஒவ்வொரு ட்வீட் வெளியாகும்.

எமது உளவுத்துறை சங்கேத சொற்களை உருவாக்குவதிலும், உடைப்பதிலும் கில்லாடிகள் என்பது தெரிந்த விஷயம்தானே. அந்த திறமையுடைய புதியவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்பதற்காகவே, சங்கேத சொற்களில் இப்படி ஒருவித விளம்பரம் செய்கிறோம்.

திறமைசாலிகள் எமது ட்வீட்களை புரிந்து கொண்டு, இம்மாத முடிவில், பணிக்கு எங்கே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிந்து கொள்வார்கள். நாம், அவர்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

உளவுத்துறை இப்படியான திறமையுள்ள ஆட்களை தேடித்தேடி பணியில் அமர்த்துவது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல. கம்ப்யூட்டர் ஹாக்கர்கள் பலரையே பணியில் அமர்த்தியுள்ளார்கள் அவர்கள். ஆனால், அமெரிக்க உளவுத்துறையில் பணிபுரிய செக்யூரிட்டி கிளியரன்ஸ் தேவை அல்லவா? சிறு குற்றங்கள் புரிந்திருந்தால்கூட செக்யூரிட்டி கிளியரன்ஸ் கிடைக்காது அல்லவா?

அதற்கும், NSA-வின் இணையத்தள recruiting page-ல் கீழ்வரும் குறிப்பு உள்ளது:

“If you have a few, shall we say, indiscretions in your past, don’t be alarmed. You shouldn’t automatically assume you won’t be hired. If you’re really interested, you owe it to yourself to give it a shot.”

நீங்கள் கடந்த காலத்தில் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தால், அதற்காக உங்களை நிராகரிக்க மாட்டோம் என்பதை டிப்ளமேட்டிக்காக சொல்லியிருக்கிறார்கள், அந்தக் குறிப்பில்! “கிரிமினல் ரிக்கார்ட் இருந்தாலும் வெல்கம்”

இவுக போகும் ரூட்டை பார்த்தால், அமைச்சரின் மூணாவது சம்சாரத்தின் மூணாம் கிளாஸ் படித்த சித்தி பொண்ணு, சிபாரிசில் பணியில் சேர்வது அவ்வளவு சுலபமில்லை போலிருக்கிறதே!


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!