Thursday, October 17, 2013

அதிசயம் ஆனால் உண்மை: தூக்கிட்டும் உயிர்பிழைத்த ஈரான் கைதி... மீண்டும் தூக்கிலிட அரசு முடிவு

அதிசயம் ஆனால் உண்மை: தூக்கிட்டும் உயிர்பிழைத்த ஈரான் கைதி... மீண்டும் தூக்கிலிட அரசு முடிவு 


தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதி, மீண்டும் உயிர் பெற்றதால் குழப்பமைடைந்த ஈரான் அரசு, அக்கைதியை மீண்டும் தூக்கிலிட முடிவு செய்துள்ளது. ஆனால், இதற்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

போதைப் பொருள் கடத்திய வழக்கில் கைதாகிய அலிரெசா(37) என்ற குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, கடந்த வாரம் புதன்கிழமை அதிகாலையில் போஜ்னர்ட் சிறை வளாகத்தில் நிறைவேற்றப் பட்டது. 

கிட்டத்தட்ட 12 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு, அடங்கிப்போன அலிரெசாவின் உடலை பரிசோதித்த சிறை மருத்துவர்கள் அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர். 

பின்னர், சவக்கிடங்குக்கு அனுப்பப்பட்ட அந்த உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக மூட்டை கட்டும் பணி நடந்தது. அப்போது, அலிரெசாவின் உடலில் அசைவு இருப்பதாக சந்தேகித்த சவக்கிடங்கு ஊழியர்கள், உடனடியாக அத்தகவலை மருத்துவர்களுக்குத் தெரிவித்தனர். 

உடனடியாக போஜ்னர்ட் இமாம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அலிரெசாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரோடு இருப்பதாக ஆச்சர்யம் தெரிவித்தனர். மரணித்து விட்டார் எனக் கருதப்பட்ட அலிரெசா, தற்போது நலமாக உள்ளதை அறிந்த உறவினர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர்

ஆனால், தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் மீண்டும், அலிரெசாவைக் கைது செய்தனர். அவர் முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் தூக்கிலிட்டு கொல்ல ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. 

சர்வதேச சட்டங்களின்படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஒரு நபர் உயிர் பிழைத்து விட்டால் அவரது குற்றத்தை மன்னித்து விடுதலை செய்து விடுவது தான் மரபு. இதற்காகவே மரண தண்டனை கைதிகளின் உடல்நிலை, தூக்கிலிடும் கயிறு உள்பட பல்வேறு அம்சங்கள் ஒன்றிற்கு இருமுறை சிறை அதிகாரிகளால் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. 

ஆனால், அலிரெசாவுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி, 'அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மரணத்தில் இருந்து தப்பிவிட்டாலும் மீண்டும் அந்த தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.

அலிரெசாவை மீண்டும் தூக்கிலிடும் முடிவுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட்டில் ஈரானின் புதிய அதிபராக ரவுகானி பதவியேற்றதிலிருந்து இதுவரை 125 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!