Wednesday, September 4, 2013

டாலரை காக்கும் செளதி அரேபியா, 'ஜாலி' அமெரிக்கா: தன்னை காக்க போராடும் இந்தியா- ஈரான்!

டாலரை காக்கும் செளதி அரேபியா, 'ஜாலி' அமெரிக்கா: தன்னை காக்க போராடும் இந்தியா- ஈரான்! 


அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.

இப்போது ஒரு பிளாஷ்பேக்... 

ஹிட்லர் கொல்லப்பட்டு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரம். அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் சூடு பிடித்து, கார்கள் உற்பத்தியும் விற்பனையும் உச்சத்தை அடைந்த நேரம். உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருந்தாலும் அமெரிக்காவிலேயே எரிபொருளுக்கு தட்டுப்பாடு... தனது எதிர்காலம் கச்சா எண்ணெய்யின் வரத்துடன் சார்ந்து இருப்பதை அமெரிக்கா உணர்ந்த நேரம். அதே நேரத்தில் செளதி அரேபியாவில் தான் உலகிலேயே மிக அதிகமான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக கண்டறியப்பட்ட நேரம்.  

கப்பலில் ரூஸ்வெல்ட்-செளதி அரேபிய மன்னர்: 

இந் நிலையில், அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் எகிப்துக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான ரெட் சீ பகுதிக்கு ரகசியமாய் செல்கிறார். அங்கு நிலைநிறுத்தப்பட்டிருந்த USS Quincy போர்க் கப்பலில் ரூஸ்வெல்ட் மற்றும் அப்போதைய செளதி அரேபிய மன்னர் இப்ன் செளத் இருவரும் சந்தித்துப் பேசுகின்றனர். அமெரிக்காவுக்கு தடையில்லாத கச்சா எண்ணெய் சப்ளை வேண்டும். இதை செளதி அரேபியா நிறைவேற்றித் தர வேண்டும் என்ற ரூஸ்வெல்ட்டின் கோரிக்கையை இப்ன் செளத் மெளனமாய் கேட்கிறார்.  

சிக்கல் இல்லாமல் ஆட்சியில் இருக்க: 

இதைச் செய்தால், உங்களது பரம்பரையே செளதியில் தொடர்ந்து எந்த சிக்கலும் இல்லாமல் ஆட்சியில் இருக்க அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என்ற வாக்குறுதி தரப்படுகிறது. அமெரிக்க ராணுவம் எப்போதும் செளதிக்கு (மன்னர் குடும்பத்துக்கு) ஆதரவாய் இருக்கும், உங்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் நாங்கள் வருவோம் என்கிறார் ரூஸ்வெல்ட். ஆனால், நீங்கள் தரும் கச்சா எண்ணெய்க்கான பணத்தை நாங்கள் டாலர்களில் வழங்குவோம் என்கிறார். (அதற்கு முன் சர்வதேச வர்த்தம் பல்வேறு நாடுகளின் கரன்சிகளிலும் தங்கத்தையும் அடிப்படையாக வைத்து நடந்து வந்தது).  

இப்படித்தான் டாலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது: 

இதை செளதி மன்னர் ஏற்றுக் கொள்ள உலகின் மாபெரும் வர்த்தகம் (கச்சா எண்ணெய்) டாலர்களில் ஆரம்பிக்கிறது. இதன் பின்னர் உலகளவிலான பெரும்பாலான வியாபாரம் டாலர்களுக்கு மாறுகிறது. இப்படித்தான் டாலரின் ஆதிக்கம் உலகில் ஆரம்பமானது. எல்லா நாடுகளும் தங்களது வேண்டியதை இறக்குமதி செய்ய டாலர்களை சேமித்து வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

பலவீனமான நிலை: 

இந் நிலையில் 1970ம் ஆண்டில் டாலரின் மதிப்பு சடாரென சரிந்தது. இதனால் கச்சா எண்ணெய்யை விற்று விற்று டாலர்களைக் குவித்து வைத்திருந்த வளைகுடா நாடுகளுக்கு பெரும் சிக்கல். அவர்களது அன்னிய செலாவணி கையிருப்பு (டாலர்கள்) வீங்கிப் போய், பலவீனமான நிலைக்குப் போனது. இதையடுத்து சில வளைகுடா நாடுகள் இனியும் டாலரை மையமாக வைத்து கச்சா எண்ணெய் வர்த்தம் செய்வது தவறு, இதை பல்வேறு கரன்சிகள் அடங்கிய வர்த்தகமாக மாற்ற வேண்டும் என்று குரல் தந்தன. குறிப்பாக, ஈரான். இதை கத்தார், இராக், யுஏஇ, வெனிசுவேலா ஆகியவை ஆதரித்தன.  

செளதி அரேபியா இதை ஏற்கவில்லை: 

ஆனால், உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான செளதி அரேபியா இதை ஏற்கவில்லை. காரணம், செளதியில் அவ்வளவு டாலர்கள் இருந்தது தான். எண்ணெய் வர்த்தகத்தை மற்ற கரன்சிகளுக்கு மாற்றினால் அதனிடம் இருப்பில் உள்ள டாலர்களின் மதிப்பு பெருமளவில் சரிந்துவிடும். இது ஒரு குறுகிய கால பிரச்சனை தான். இருந்தாலும் அந்த ரிஸ்க்கை செளதி எடுக்கவில்லை. இதற்கு இன்னொரு முக்கிய காரணம், அமெரிக்காவை பகைக்க விரும்பாதது.

இது தான் பின்னணி: 

(இதை இன்னும் விளக்க வேண்டுமானால்... ரூஸ்வெல்ட் தந்த உறுதிமொழிப்படி செளதி அரச குடும்பத்துக்கு இன்று வரை உறுதுணையாக நிற்கிறது அமெரிக்கா. செளதியில் ஜனநாயகம் தளைக்க வேண்டும் என்றெல்லாம் அமெரிக்கா பேசுவதில்லை, அதே போல இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கோபம் வரும் அளவுக்கு, செளதியும் பெரிய அளவில் மூக்கை நுழைப்பதில்லை)

இது தான் செளதி நிலைமை: 

இப்படியே பல ஆண்டுகளாய், டாலர்களிலேயே வர்த்தகத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து இன்று என்ன நிலைமை என்றால் டாலரின் மதிப்பைக் காப்பாற்ற அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரயத்தனப்படுவது செளதி அரேபியா தான் என்ற நிலை வந்துவிட்டது. 1980 நிலைமையின்படி செளதி அரேபியாவின் வருவாயில் 90 சதவீதம் டாலர்கள் தான். அதே போல செளதி அரேபியாவின் முதலீடுகளில் 83 சதவீதம் டாலர்களாகவே இருந்தன. இப்போதும் நிலைமை அதே. இதனால், டாலர்களின் மதிப்பை காக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவை விட செளதிக்கே அதிகம் என்ற நிலைமை வந்துவிட்டது.  

இந்திய ரூபாயின் சமீபத்திய நிலைமை தான் உருவாகும்: 

(இதன்மூலம் நாம் அறிவது என்னெவென்றால், டாலர் சர்வதேச கரன்சியாக கோலோச்ச வேண்டும் எனில் உலகளவிலான கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர்களில் தான் தொடர்ந்து நடக்க வேண்டும். அது நடக்கும் வரை அமெரிக்காவுக்கு எந்தக் கவலையும் இல்லை. வேண்டும் அளவுக்கு டாலர்களை அச்சடித்து செலவிடுவார்கள். ஆனால், மற்ற நாடுகள் தான் டாலர்களின் பின்னால் ஓடி, ஓடி அதை சேர்த்து வைக்க வேண்டும். டாலர்கள் கையில் இல்லாத நாட்டின் கரன்சிக்கு இந்திய ரூபாயின் சமீபத்திய நிலைமை தான் உருவாகும்.)

ஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு: 

செளதியின் ஆதரவு இல்லாததால் டாலரைத் தவிர்த்த பிற கரன்சிகளில் வர்த்தகம் செய்யும் முடிவை மற்ற வளைகுடா நாடுகளும் நீண்ட காலததுக்கு முன்பே கைவிட்டுவிட்டன. ஆனால், ஈரான் மட்டுமே இதில் விதிவிலக்கு. நீண்ட காலமாகவே அமெரிக்காவின் டார்ச்சருக்கு உள்ளாகி வரும் ஈரான், ரஷ்யா- சீனா- இந்தியா போன்ற நாடுகளுடன் தனது வர்த்தகத்தை டாலரிலும் ரூபிளிலும், யுவான் மற்றும் ரூபாயிலுமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஈரானுக்கும் டாலர் தேவை. வெறும் ரூபிளையும் யுவானையும் ரூபாயையும் வைத்துக் கொண்டு அந்த நாடு என்ன செய்ய முடியும்?.

ஈரானுக்கும் டாலர்கள் வேண்டுமே..: 

ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து அரிசி, பருப்பு, டீ, மருந்துகள், கருவிகள், ராணுவ தளவாடங்கள், மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்யலாமே தவிர, ரஷ்யா- சீனா- இந்தியாவில் கிடைக்காத, மற்ற நாடுகளில் கிடைக்கும் பொருள்களை இறக்குமதி செய்ய ஈரானுக்கும் டாலர்கள் வேண்டுமே.. இதனால், அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்றாலும், இதற்கு மேலும் இந்தியாவுக்கு ரூபாயில் ஈரான் கச்சா எண்ணெய்யை விற்குமா என்பது சந்தேகமே.  

யூகோ வங்கியில் ஈரானின் ரூ. 30,000 கோடி: 

(இந்தியாவுக்கு ஈரான் விற்கும் கச்சா எண்ணெய்க்காக அந்த நாட்டுக்கு தரப்படும் பணத்தில் 45 சதவீதம் கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கிக் கிளை மூலம் ரூபாயாகத் தரப்படுகிறது. இந்தப் பணம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து ரூ. 30,000 கோடிகளைத் தொட்டுவிட்டது. ஆனால், இதை ஈரான் இதை இன்னும் பயன்படுத்தவே இல்லை. காரணம், ரூபாயை வைத்துக் கொண்டு சர்வதேச சந்தையில் ஈரானால் ஏதும் வாங்க முடியவில்லை)

கப்பல்கள் இல்லை: 

மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொண்டு வர நாம் சார்ந்து இருப்பது அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளின் டேங்கர்களைத் தான். இந்த அளவுக்கு மாபெரும் டேங்கர்கள் இந்தியாவிடமும் இல்லை, ஈரானிடமும் இல்லை. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இந்த டேங்கர்களை ஈரான் பக்கமே போகக் கூடாது என்று உத்தரவு போட்டுவிட்டன. இதனால் ஈரானே முன்வந்தாலும் அதை இந்தியாவுக்குக் கொண்டு வருவது எளிதல்ல. மேலும் தனது கச்சா எண்ணெய்க்கு ஈடாக ஈரான் ரூபாய்க்குப் பதிலாக தங்கத்தைக் கேட்கலாம். அதைத் தருவதிலும் இந்தியாவுக்குப் பிரச்சனை இல்லை.  

பிரச்சனை அமெரிக்காவுக்கு அல்ல: 

ஆனால், இதில் அமெரிக்காவுக்குத் தான் பிரச்சனை. கச்சா எண்ணெய் வர்த்தகம் டாலர் தவிர்த்து வேறு எதிலும் (தங்கம் அல்லது ரூபாய்) நடக்கக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது அந்த நாடு. இதனால் இந்தியாவுக்கு மறைமுகமாக பலவிதமான நெருக்கடிகளைத் தந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைக்க வைத்துவிட்டது. இதனால் இழப்பு அமெரிக்காவுக்கு அல்ல. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் தான்!  

Join with us on Facebook  >>>

              அறிவியல்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!