Monday, May 6, 2013

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் சொதப்பிய இந்திய காங்கிரஸ்

மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் சொதப்பிய இந்திய காங்கிரஸ்



மலேசியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் சாதிக்கத் தவறி விட்டது. வெறும் 4 இடங்களில் மட்டுமே அது வெற்றி பெற்றுள்ளது. மலேசிய தேர்தலில் ஆளும் பாரிசான் தேசிய கூட்டணிக்கு 133 இடங்கள் கிடைத்துள்ளன. இது ஆட்சியமைக்கத் தேவையான சீட்களை விட 21 இடங்கள் கூடுதலாகும். அன்வர் இப்ராகிம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 89 இடங்கள் கிடைத்தன.

ஆளும் கூட்டணியில் மலேசிய இந்திய காங்கிரஸ் இடம் பெற்று தேர்தலைச் சந்தித்தது. இத்தேர்தலில் மலேசிய இந்தியர்கள், ஆளும் கூட்டணிக்கே ஏகோபித்த ஆதரவை வழங்கியுள்ளனர். ஆனால் அதை சரியாக பயன்படுத்த் தவறி விட்டது மலேசிய இந்திய காங்கிரஸ் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மலேசியாவிலேயே மிகப் பெரிய இந்தியவம்சவாளி கட்சி மலேசிய இந்திய காங்கிரஸ்தான். இத்தேர்தலில் அது 9 இடங்களில் போட்டியிட்டது. அதில் நான்கில் வெற்றி பெற்றது. இது கடந்த 2008 தேர்தலை விட ஒரு இடம் கூடுதலாகும்.

கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் கேமரூந் ஹைலேன்ட்ஸ் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட மனோகரனை வீழ்த்தினார்.

துணைத் தலைவர் எஸ்.சுப்ரமணியம் செகாமாட் தொகுதியில், சீன வம்சாவளி வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றார்.

இவர்கள் தவிர மலேசிய இந்திய காங்கிரஸின் இன்னொரு துணைத் தலைவர் சரவணன் தபா தொகுதியிலும், இளைஞர் அணி தலைவர் கமலநாதன், ஹுலு செலாங்கூர் தொகுதியிலும் வென்றுள்ளனர்.

இத்தேர்தலில் மலேசிய இந்திய காங்கிரஸைச் சேர்ந்த தேவமணி, முருகேசன், மோகா, பிரகாஷ் ராவ், சக்திவேல் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

மாகாணத் தேர்தலில் அதாவது சட்டசபைத் தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 5ல் மட்டுமே மலேசிய இந்திய காங்கிரஸ் வென்றுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இந்த முறை ஒரு இடம் மட்டுமே கூடுதலாக பெற்றுள்ளது மலேசிய இந்திய காங்கிரஸ். கடந்த தேர்தலில் அக்கட்சியின் தலைவராக இருந்த டத்தோ சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!